சென்னை: தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ரவிக்குமார்(43) என்பவரை இவ்விரு மாவட்ட காவல்துறையினரும் வலைவீசித் தேடி வந்தனர். இதனிடையே இவர் வெளிநாட்டிற்கு தப்பித்து சென்று தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இவரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக காவல்துறை அறிவித்து, அனைத்து சர்வதேச விமானநிலையங்களுக்கும் இவர் குறித்து எல்ஓசி (Lookout Circulars - LOC) அனுப்பியிருந்தனர்.
துபாயிலிருந்து திரும்பிய திருடன்: 20 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டிற்கு தப்பியோடிய ரவிக்குமார், வெளிநாட்டில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றபோது அவருக்கு வயது 23 . 20 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் நம்மை தேடவா போகிறார்கள் என்று எண்ணி துபாயிலிருந்து இந்தியா திரும்ப முடிவு செய்து தன் 43வது வயதில், நேற்று ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்து இறங்கி இருக்கிறார் ரவிக்குமார்.
குண்டுக் கட்டாக கைது: அப்போது, சென்னை விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் வழக்கம்போல் அனைத்து பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் கணினியில் ஆய்வு செய்தனர். ரவிக்குமாரின் பாஸ்போா்ட்டை ஆய்வு செய்ததில், 20 ஆண்டுகளாக தஞ்சாவூர் போலீசாரால், திருட்டு வழக்குகளில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிய வந்தது.
தூக்கிச் சென்ற போலீசார்: இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், ரவிக்குமாரை வெளியே விடாமல், ஒரு அறையில் அடைத்து வைத்தனா். அதோடு தஞ்சாவூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தனா். அங்கிருந்து தனிப்படை போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு வந்து, ரவிக்குமாரை இன்று (ஆக.25) கைது செய்து பின், பலத்த பாதுகாப்புடன் தஞ்சாவூர் கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: பெற்ற தாயைக்கவனிக்காத அமெரிக்காவில் பணியாற்றும் மகனை கைது செய்த போலீசார்.. தக்க பாடம் எடுத்த நீதிமன்றம்