சென்னை: அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அமைச்சர் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள், நிதி நிலையினை மேம்படுத்துதல், அறிவிப்புகளின் செயல்படுத்தல் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முதலமைச்சரின் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக போக்குவரத்து துறையினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதன் மூலம் அதிகளவில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதாகவும், சாதாரணக் கட்டண பயணிகளில் மகளிரின் பங்கு 40 சதவீதத்திலிருந்து 62 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், இன்று (ஜூன் 16) வரை 126 கோடியே 10 லட்சம் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் அனைத்துப் பேருந்துகளையும் ஒரே வண்ணத்தின் கீழ் கொண்டுவரவும், நாள்தோறும் இயக்கப்படும் இரவு நேரப் பேருந்துகள் இயக்கத்தையும், தொலைதூர பேருந்துகள் இயக்கத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பத்தை முழுவதுமாக பயன்படுத்தி, பேருந்துகள் இயக்கம், வழித்தடத்திற்கான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தினசரி பணி ஒதுக்கீடு, உருளிப்பட்டையில் உள்ள காற்றின் அழுத்தம், அனைத்துப் பேருந்துகளிலும் CCTV கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள், பேருந்தினுள் ஒலிபெருக்கி மூலம் அடுத்த பேருந்து நிலைய அறிவிப்பு, Chennai Bus செயலியினை அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கும் விரிவுப்படுத்துதல், போக்குவரத்துக் கழகங்களின் இயக்க செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் Dash Board நிறுவுதல், பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்திற்கும் தனித்தனி வலைதளம் உருவாக்குதல் உள்ளிட்டவற்றை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், பயணக் கட்டணத்தை தவிர்த்து, விளம்பரம் மூலம் இதர வருவாயினை பெருக்குவதற்கான சாத்தியக்கூறுகளை முழுமையாக ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: கொடி பிடிக்கும் கையில், ஆயுதம் பிடிக்கவும் தெரியும் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆவேசம்!