சென்னை: சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 1 இரவு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் அதிக அளவில் வருகை தரும் நிகழ்ச்சி என்பதால் பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக காவல்துறையினர் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
அதன்படி நேற்று கபாலீஸ்வரர் கோவிலின் ஒரு வாயிற் பகுதியில் ராயப்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் என்பவர் பொதுமக்களை ஒரு வழியில் அனுப்பி வந்துள்ளார். அப்போது அங்கு தனது நண்பருடன் வந்த பாலாஜி என்பவர் வரிசையில் நிற்காமல் வெளியே செல்லும் வழியில் உள்ளே செல்ல முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களைத் தடுத்து நிறுத்தி வரிசையில் செல்லும்படி உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு பாலாஜி உதவி ஆய்வாளருடன் தகராறில் ஈடுபட்டு, ”நானும் போலீஸ் தான்..”எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் உதவி ஆய்வாளரைத் தாக்கியுள்ளார். இதில் உதவி ஆய்வாளருக்குக் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பாலாஜியைப் பிடித்து மயிலாப்பூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் இவர், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பதும் இவர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காவலராக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பணியிலிருந்த உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக பாலாஜி மீது ஆபாசமாகப் பேசுதல், ஆயுதங்களைக் கொண்டு மிரட்டல், அரசு ஊழியரைப் பணிசெய்யவிடாமல் தடுத்தல், குற்றம் கருதி மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:தினமும் ஓசியில் பிரியாணி கேட்பதாக திமுக நிர்வாகி மீது புகார்