சென்னை: நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்றைய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வட தமிழ்நாடு பகுதிகளில் கரையைக் கடந்தது. தற்போது அது வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வட உள் தமிழ்நாடு, அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவுகிறது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி ஆந்திரப் பகுதியிலிருந்து குமரிக்கடல் வரை தமிழ்நாடு வழியாகப் பரவியுள்ளது. நாளை (நவ. 13) தெற்கு அந்தமான், அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும். மேலும் மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய கிழக்கு, அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுபெறக்கூடும்.
மழை பெய்யக்கூடிய பகுதிகள்
இதனால், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், பிற மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
நவம்பர் 13ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டத்தில் ஒரு இடங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னையில்...
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், நான்கு இடங்களில் மிக கனமழையும், 24 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுரலாகோட்டில் 15, கன்னிமார் (கன்னியாகுமரி), ஏற்காடு இஸ்ரோ (சேலம்) 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று (நவ. 12)
குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
(நவம்பர் 12, 13)
கேரளா கடற்கரைப் பகுதிகள், அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதனால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 56 விழுக்காடு அதிகமாகப் பதிவாகியுள்ளது. சென்னையில் ஐந்து மடங்கிற்கும் அதிகமாகப் பெய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இன்றுவரை தமிழ்நாட்டில் 491 விழுக்காடு கூடுதலாக மழை பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை: வெள்ள நீரில் தத்தளிக்கும் 4,000 வீடுகள்!