சென்னை: தஞ்சாவூரைச் சேர்ந்தவர் குமரவேல் (31). கட்டடத் தொழிலாளியான இவர், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்திற்குச் சென்றார். அங்கு கட்டடத் தொழிலாளியாக வேலை செய்துவந்தார்.
குமரவேலுக்கான விசா காலம் முடிந்த பின்பும், அவர் இந்தியாவிற்குத் திரும்பிவராமல், சவுதி அரேபியாவிலேயே சட்டவிரோதமாகத் தங்கியிருந்து வேலை செய்துவந்தார்.
இந்நிலையில் குமரவேலுக்கு சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆனால் காலாவதியான விசாவுடன் திரும்பிவர முடியாது. அந்த நாட்டு விமான நிலையத்தில் குடியுரிமை அலுவலர்கள் கண்டுபிடித்து கைதுசெய்தால், சிறை தண்டனை உள்பட கடுமையான தண்டையை அளிப்பாா்கள் என்று பயந்தார்.
![தடைசெய்யப்பட்ட ஏமன் நாட்டுக்குச் சென்ற இந்தியர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-arrestedforgoingtoacountrybannedbytheindiangovernment-photo-script-7208368_28092021091545_2809f_1632800745_898.jpg)
இந்நிலையில் அருகே உள்ள ஏமன் நாட்டிற்குச் சென்றுவிட்டால், அங்கிருந்து போலி விசா போன்ற ஆவணங்களைப் பணம் கொடுத்துவாங்கி, சாா்ஜா வழியாக இந்தியாவிற்கு வந்துவிடலாம் என்று நண்பர்கள் சிலர் கூறினர். ஏமன் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட நாடு என்பது தெரிந்தும் குமரவேல், 15 நாள்களுக்கு முன்பு ஏமனுக்குச் சென்றுவிட்டார்.
ஏமனில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, சில முகவர்கள் மூலம் போலி விசா வாங்க ஏற்பாடு செய்தார். இதற்கிடையே ஏமன் நாட்டு குடியுரிமை அலுவலர்களுக்கு, குமரவேல் பற்றிய தகவல் கிடைத்தது.
மத்திய உளவுத் துறை தீவிர விசாரணை
இதையடுத்து அந்நாட்டு குடியுரிமை அலுவலர்கள் குமரவேலை கைதுசெய்து முகாமில் வைத்தனர். அதன்பின்பு அவரை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப முடிவுசெய்தனர். அதன்படி குடியுரிமை அலுவலர்கள் குமரவேலை சாா்ஜா வழியாக ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.
![தடைசெய்யப்பட்ட ஏமன் நாட்டுக்குச் சென்ற இந்தியர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-arrestedforgoingtoacountrybannedbytheindiangovernment-photo-script-7208368_28092021091545_2809f_1632800745_79.jpg)
அத்தோடு சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அலுவலர்கள், இந்திய அரசால் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடைசெய்யப்பட்ட ஏமன் நாட்டிற்குச் சென்ற குற்றத்திற்காகக் கைதுசெய்தனர்.
மேலும் குமரவேலிடம் பல மணி நேரம் துருவித்துருவி விசாரித்தனர். அத்தோடு மத்திய உளவுத் துறையினரும் விசாரணை நடத்தினர். குமரவேலின் செல்போன் பதிவுகளை முழுமையாக ஆய்வுசெய்தனர். மேலும் குமரவேல் ஏமனில் எங்கு தங்கியிருந்தார்? இந்திய அரசின் தடையை மீறி ஏமன் நாட்டிற்குச் சென்றது ஏன் என்றும் விசாரணை நடந்தது.
![தடைசெய்யப்பட்ட ஏமன் நாட்டுக்குச் சென்ற இந்தியர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-arrestedforgoingtoacountrybannedbytheindiangovernment-photo-script-7208368_28092021091545_2809f_1632800745_94.jpg)
வழக்குப்பதிவு
அதன்பின்பு சென்னை விமான நிலைய காவல் துறையில் ஒப்படைத்தனர். காவல் துறையினரும் கடவுச்சீட்டைத் தவறாகப் பயன்படுத்துதல், அரசால் தடைசெய்யப்பட்ட நாட்டிற்குச் சட்டவிரோதமாகச் சென்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இதையும் படிங்க: மனம் திருந்தி ஆட்டோ ஓட்டிவந்த முன்னாள் ரவுடி வெட்டிக்கொலை