சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களுக்கு உட்பட்டு 200 வார்டுகள் உள்ளன. இதற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கட்டட மற்றும் நில உரிமையாளர்களிடம் சொத்து வரியும், தொழில் மற்றும் வணிகம் சார்ந்து இயங்கும் கட்டடங்களில் தொழில் வரியும், தொழில் உரிம வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக முதல் அரையாண்டில் மட்டும் 945 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் வருவாயை உயர்த்தவும், நீண்டகால நிலுவையில் உள்ள வரியை வசூலிக்க வேண்டும் என மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் நிலுவை வரி மற்றும் நடப்பாண்டு வரியை வசூலிக்க அதிகாரிகள் தீவிரம் காண்பித்தனர். உரிய நேரத்தில் வரியை செலுத்துபவர்களுக்கு சலுகைகளையும் மாநகராட்சி அளித்தது. இதன் காரணமாக கடந்த நிதியாண்டின் மொத்த வரி வருவாய்க்கு நிகராக நடப்பாண்டின் முதல் அரையாண்டிலேயே வரி வசூல் ஆகியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த 2021-2022 நிதியாண்டில் மொத்தமே 1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. ஆனால் தற்போது முதல் அரையாண்டில் மட்டும் 945 கோடி வசூலாகியுள்ளது என தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி 2022-23ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.1700 கோடி வரி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் வரிகளையும், நிலுவையில் உள்ள வரிகளையும் விரைந்து செலுத்த பொதுமக்கள் தாமாகவே முன்வர வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
வரி வசூல் ஒப்பீடு:
2021-2022 முதல் அரையாண்டில் சொத்துவரி 375 கோடி
தொழில் வரி 225 கோடி
மொத்தம் 600 கோடி
2021-2022 இரண்டாம் அரையாண்டில் சொத்துவரி 403 கோடி
தொழில் வரி 237 கோடி
மொத்தம் 640 கோடி
2022-2023 நிதியாண்டின் முதல் அரையாண்டில்
சொத்து வரி 697 கோடி
தொழில் வரி 248 கோடி
மொத்தம் 945 கோடி
தற்போது கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டை விட 345 கோடி கூடுதல் வரி வசூல் ஆகியுள்ளது.
இதையும் படிங்க:பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் இரட்டிப்பாக அதிகரிப்பு