சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதற்காக வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தது.
அந்த வழிகாட்டு நெறிமுறைகளில், பெற்றோரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளிக்கூடத்தில் கிருமி நாசினிகள் வைத்திருக்க வேண்டும். மாணவர்களை இடைவெளிவிட்டு அமர வைக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 38 உயர்நிலை பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 70 பள்ளிகள் நாளை (ஜன.19) திறக்கப்படும் என மாநகராட்சி உதவி கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய உதவி கல்வி அலுவலர் முனியன், " நாளை சென்னை மாநகராட்சி கீழ் இயங்கும் 70 பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. அரசு அறிவித்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி, மாணவர்கள் உள்ளே வருவது முதல் வெளியில் செல்வதுவரை அவர்களுக்கு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில் 25 நபர்களுக்கு குறைவான மாணவர்களை மட்டுமே தகுந்த இடைவெளியுடன் அமர வைப்போம். பள்ளிகள் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க 10 அலுவலர்கள் இருக்கிறோம். தினமும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் சென்று ஆய்வு மேற்கொள்வோம் ஏதாவது குறைகள் இருந்தால் அவை சரி செய்யப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு... ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகள்... தீவிரமடையும் தூய்மைப் பணிகள்