தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து குடும்ப அட்டைதாரர்களையும், டிஜிட்டல் முறைக்கு மாற்றும் நடவடிக்கை சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது. இதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் முக்கியத் தகவல்கள், ஆதார் எண்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி, பொது விநியோகத் திட்டத்துக்காக சேகரிக்கப்பட்ட, 49 லட்சத்து 19 ஆயிரத்து 668 பேரின் ஆதார் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதில் 3 லட்சத்து 59 ஆயிரத்து 485 பேரின் ஆதார் எண்கள், குடும்ப விவரங்கள், அலைபேசி எண்கள் உள்ளிட்டவையும் இணையத்தில் லீக் ஆகி இருப்பதாக பெங்களூரைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான 'டெக்னிசாங்க்ட்(TechniSanct)' தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தகவல் மீறல் கணினி அவசரநிலை பதிலளிப்பு குழுவுக்கு (சிஇஆர்டி), டெக்னிசாங்க்ட் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மக்களை மோசடிக்கு ஆளாகாமல் பாதுகாப்பது அவசியம்
இது குறித்து டெக்னிசாங்க்ட் தலைமை நிர்வாக அலுவலர் நந்தகிஷோர் ஹரிகுமார் பேசுகையில், 'இந்த தகவல் மீறலின் நிலை குறித்து எங்கள் குழு மதிப்பீடு செய்து வருகிறது. இந்த விஷயத்தில் குடிமக்கள் மோசடிக்கு ஆளாகாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதால், தகவல்கள் வெளியிடப்பட்ட ஆதார் பதிவுகளின் எண்ணிக்கையை பகிரங்கமாக வெளியிட்டுள்ளோம்' என்றார்.
தமிழ்நாடு அரசின் Tnpds.gov.in என்ற அதிகாரப்பூர்வ குடும்ப அட்டைப் பயன்பாடு இணையதளப்பக்கமானது, 1945VN என்ற பெயரில் இயங்கும் சைபர் கிரிமினல் குழுவால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் 6 கோடியே 70 லட்சம் ஆதார் விவரங்கள் குறித்த தகவல்கள் இந்த குறிப்பிட்ட வலைதளப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலும் யாருடைய விவரங்கள் எல்லாம் இணையத்தில் வெளிவரப்போகிறதோ என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
பொது விநியோகத் திட்டத்திற்காக சேகரிக்கப்பட்ட ஆதார் விவரங்கள், தற்போது இணையத்தில் லீக் ஆன விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஷாக் அடித்த தங்கம்- ஒரே நாளில் கிடு கிடு!