சென்னை: டெல்லி பாட்னாவைச்சேர்ந்த ஷாயிஃப் அஷ்ரஃப்(21), ஆதித்யா (21) ஆகிய இருவர், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி, அதே கல்லூரியில் கம்பியூட்டர் சயின்ஸ் 2ஆம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி இருவரும் திருவேற்காட்டைச்சேர்ந்த பைக் மெக்கானிக் வெங்கடேசன் (39) என்பவருக்குச்சொந்தமான சொகுசுக் காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வெளியூர் புறப்பட்டுச்சென்றுள்ளனர்.
பயணம் முடிந்து நேற்று அதிகாலை மாணவரகள் இருவரும் காரில் சென்னைக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது பூந்தமல்லி அருகே வரும்போது மாணவர்கள் ஓட்டி வந்த கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு காரும் சிறிய அளவில் சேதமடைந்த நிலையில், இருதரப்பினரும் சமாதானமாகச்செல்வதாகக் கூறி அங்கிருந்து வந்துள்ளனர்.
பின்னர் மாணவர்கள் இருவரும் காரை அதன் உரிமையாளர் வெங்கடேசனிடம் ஒப்படைத்துவிட்டு, கார் சேதத்திற்காக வாடகையுடன் சேர்த்து மொத்தமாக 20ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு கல்லூரிக்குச்சென்று விட்டனர். இதனையடுத்து நேற்று வெங்கடேசன் தனது நண்பர்கள் 4 பேருடன் கல்லூரி விடுதி முன் சென்று அஷ்ரஃப், ஆதித்யா ஆகிய இருவரையும் வெளியே வரும்படி அழைத்துள்ளார்.
பின்னர் வெளியே வந்த மாணவர்களிடம் நீங்கள் தானே காரை விபத்து ஏற்படுத்தினீர்கள் எனக்கூறி அவர்களைத் தான் வந்த காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச்சென்றுள்ளார். பின்னர் அவர்களை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு குடோனில் அடைத்து வைத்து 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் விடுவிப்போம் என அஷ்ரஃபின் சகோதரரை தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அஷ்ரஃபின் சகோதரர் உடனே சென்னையில் தனக்குத்தெரிந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதனடிப்படையில் வழக்கறிஞர் ரமேஷ் மாணவர்கள் கடத்தல் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்ததன்பேரில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ராமாபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே காவல் துறையினர் கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணின் டவர் லொக்கேஷனை ஆய்வு செய்த போது, டவர் லொக்கேஷன் மதுரவாயல் நூம்பல் பகுதியில் காண்பித்தது. உடனே தனிப்படை காவல் துறையினர் சம்பவயிடத்திற்குச்சென்று, அங்கிருந்து குடோனை சுற்றி வளைத்து இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்து, நடத்தப்பட்ட விசாரணையில், தனது நண்பர்கள் சந்தோஷ் குமார்(26), பார்த்திபன்(27), சரத் (22) மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தினேஷ் குமார்(30) ஆகியோருடன் சேர்ந்து மாணவர்களை கடத்திச்சென்று, அறையில் அடைத்து வைத்து, பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.
இதையும் படிங்க: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் ஸ்டுடியோ சீலை அகற்ற உயர் நீதிமன்றம் அனுமதி