சென்னை: நுங்கம்பாக்கம், பச்சையப்பன் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தைப் பார்வையிட்ட பிறகு, சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் அனுப்பப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளன. வரும் 10ஆம் தேதி கணினி வழி குலுக்கல் முறையில் வார்டுகளிலிருந்து வாக்குப் பதிவு மையங்களுக்கு இயந்திரங்கள் அனுப்பப்படும்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள்
சென்னையில் 5,794 வாக்குப்பதிவு மையங்களுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன. வாக்குப் பதிவு இயந்திரங்கள் மணலியிலிருந்து எடுத்து வரப்படுகின்றன. சென்னையில் 22 இடங்களில் உள்ள வழங்கல் மையங்களில் அவை வைக்கப்படுகின்றன.
இயந்திரங்களில் சின்னம் பொறிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. வரும் பிப்.12ஆம் தேதி வேட்பாளர்களின் பெயர் பட்டியல், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படும்.
15 மண்டலங்களில் 15 வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது. அங்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தனித்தனி அறைகள் அமைக்கப்படும். அதற்காக, 37 அறைகள் வரை அமைக்கப்படும்.
15 முதல் 17ஆம் தேதிக்குள் சிசிடிவி பொருத்துதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நிறைவடையும். சிசிடிவி மூலம் வாக்கு எண்ணும் மையங்கள் கண்காணிக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் 27ஆயிரம் பேருக்கு 10ஆம் தேதி இரண்டாம் கட்டப் பயிற்சி வழங்கப்படும்.
அஞ்சல் முறை
அஞ்சல் வாக்குப்பதிவு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு வாக்குச்செலுத்துவதற்கான படிவங்கள் வரும் பிப்.10ஆம் தேதி முதல் அவர்களின் வீடுகளுக்கே அஞ்சல் மூலம் அனுப்பப்பட உள்ளது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு நிரப்பப்பட்ட வாக்குப் படிவங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
திறந்த வெளி மைதானங்களில் பரப்புரைக்கூட்டம் நடத்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அனுமதி அவசியம், வீடுதோறும் பரப்புரை செய்ய அனுமதி தேவையில்லை.
பரப்புரையில் திறந்தவெளியில் 1,000 பேர் அல்லது 50% இருக்கைகளிலும், உள்அரங்கில் 500 பேர் அல்லது 50 % இருக்கைகள் என இவற்றில் எது குறைவான அளவோ அந்த அளவில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.
ரூ.16,15,598 லட்சம் மீட்பு
சென்னையில் 168 திறந்தவெளி இடங்களில் மட்டும் பரப்புரை நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி அளித்துள்ளார். வரும் நாட்களில் இது அதிகரிக்கப்படலாம். பறக்கும் படையினர் மூலம் சென்னையில் இதுவரை 16 லட்சத்து 15 ஆயிரத்து 598 ரூபாய் பணமாகக் கைப்பற்றப்பட்டுள்ளது. பரிசுப்பொருட்களாக 1 கோடியே 26 லட்சத்து 26ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
சென்னையில் 12, 510 அரசு இடங்களில் தேர்தல் தொடர்பான சுவரொட்டி அகற்றம், தனியார் இடங்களில் 15,815 இடங்களில் தேர்தல் சுவரொட்டி அகற்றம் ஆகிய ஏற்பாடுகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை நேரலை மூலம் கட்டுப்பாட்டு அறைகளிலிருந்து பார்க்கும் விதமாக ஏற்பாடு செய்யப்படும். வாக்குப்பதிவு மையங்களை நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பர்.
கரோனா விதிமுறைகள் கட்டாயம்
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தினால், பரப்புரையில் கரோனா விதிகளைப் பின்பற்றாமல் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் 5 இடங்களில் விதிமீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்துக்கட்சியினர் மீதும் சுவரொட்டி ஒட்டுதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரப்புரையில் வேட்பாளர்களுடன் 20 பேர் மட்டும் ஈடுபட்டுள்ளனரா என பறக்கும் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
வாக்குப் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சியின்போது முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வாக்குப் பதிவு அலுவலர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மனுதாரர் தாமதமாக வழக்குத்தாக்கல் செய்துள்ளார்... எனவே, ஏன் அபராதம் விதிக்கக்கூடாது' - நீதிபதி கேள்வி