சென்னை: தமிழ்நாட்டில் அரசு சார்பில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி 40 ஆயிரம் இடங்களில் சுமார் 29 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 19 அன்று 20 ஆயிரம் இடங்களில் 16 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கும், கடந்த 26ஆம் தேதி 23 ஆயிரம் இடங்களில் 24 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இலக்கும் இடங்களும்...
அதேபோல், ஞாயிற்றுக்கிழமையான இன்று (அக்டோபர் 3) நான்காம் கட்ட சிறப்பு கரோனா தடுப்பூசி முகா நடைபெறுகிறது. இந்த முகாம் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் நடத்தப்படுகிறது. இதில் 25 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் ஆயிரத்து 600 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த முகாம் காலை 7 மணிமுதல் மாலை 7 மணிவரை நடைபெறுகிறது. இந்தப் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுகின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.
முதியோர் தயக்கம் காட்டக் கூடாது
இதுவரை முதல் தவணை தடுப்பூசி 68 விழுக்காட்டினர் செலுத்திக்கொண்டுள்ளனர். இது இம்மாதத்திற்குள் 70 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் 20 விழுக்காட்டினர் மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
65 வயதைக் கடந்தவர்கள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டக் கூடாது என அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் ஒரு கோடியே 50 லட்சம் அளவுக்குத் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 1,578 பேருக்கு கரோனா