காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட்டில் டி.வி.எஸ், யமஹா போன்ற வாகன தொழிற்சாலைகள் உள்ளன. இதில், பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1600 தொழிலாளர் பணியாற்றி வருகின்றனர். இதேபோன்று, தொழிற்சாலைகள் அதிகமுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிபேட்டை மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டம் சேலையனூர், ஆரனேரி, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசின் நிவாரணம் இதுவரை சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக உணவு, வேலை இல்லாமல் தவித்து வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி செங்கல்பட்டைச் சேர்ந்த ஆசிர்வாதம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்துள்ளார்.
இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, காணொலி காட்சி மூலம் விசாரித்தது.
அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊரடங்கால் தமிழ்நாட்டில் சிக்கியுள்ள நான்கு லட்சத்து 30 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்களுக்குத் தேவையான ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தங்கியுள்ள 86 ஆயிரத்து 844 வெளிமாநில தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கும் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூர், வல்லம், இருங்காட்டுக்கோட்டை, பள்ளிப்பாக்கம், ஒரகடம் மற்றும் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் பணிகள் நடந்து வருவதாகவும் வழங்கப்படவில்லை என மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதாகவும் கூறினார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மே 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க : கட்டுப்பாட்டு பகுதியிலிருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் 250 கிராம் கிருமி நாசினி பவுடர் - முதலமைச்சர்