கரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் ’வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இந்தத் திட்டத்தால், ஏர் இந்தியா விமானம் மூலம் பலர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அந்த வகையில், அமெரிக்கா, ஓமன், துபாய் நாடுகளில் சிக்கித் தவித்த 399 இந்தியா்கள் மீட்கப்பட்டு மூன்று சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னை வந்தடைந்தனர்.
அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து ஏா் இந்தியா மீட்பு விமானத்தில் டெல்லி வழியாக சென்னை வரவிருந்த 60 பேரில் 14 போ் டெல்லியில் இறங்கியதையடுத்து, 46 பேர் சென்னை வந்தனர். அதேபோல் ஓமனின் மஸ்கட் நகரிலிருந்து 173 இந்தியா்களும், துபாயிலிருந்து 180 இந்தியா்களும் மீட்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டனா்.
அவா்களுக்கு சென்னை விமான நிலையத்திலேயே அரசின் இலவச கரோனா மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்பு குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடத்தப்பட்டு 14 நாள்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். இவர்களில், 197 போ் அரசின் இலவச தங்குமிடங்களுக்கும், 192 பேர் கட்டணம் செலுத்தி தங்கும் இடங்களான ஹோட்டல்களுக்கும், 10 பேர் அரசின் சிறப்பு அனுமதி பெற்று தங்களது வீடுகளுக்கும் தனிமைப்படுத்த அனுப்பப்பட்டனா்.
இந்நிலையில் இவர்களுள் 100 போ், 96 மணி நேரத்திற்கு முன்பு தாங்கள் பெற்ற மருத்துவச் சான்றிதழ்களைக் கொண்டு, தங்களுக்கு கரோனா தொற்று இல்லை எனக்கூறியும், தங்களை வீட்டிற்கு அனுப்புமாறும் சுகாதாரத்துறையினரிடம் முறையிட்டனா். ஆனால் சுகாதாரத் துறையினர் இதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும், காவல் துறையினரும் அவர்களை சமாதானப்படுத்தி அரசின் தங்குமிடங்களுக்கு அனுப்பி வைத்தனா்.
இதையும் படிங்க: வந்தே பாரத் திட்டம் - காணொலி வெளியிட்ட சுங்கத் துறை