கோவிட்-19 பாதிப்பு தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாக சென்னையில், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சைதாப்பேட்டையிலுள்ள மருத்துவ முகாமை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்ததில் மூன்றாயிரத்து 500 பேருக்கு சிறு அறிகுறி இருந்ததால், அவர்கள் கரோனா பரிசோதனை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தினந்தோறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரண நாள்களில் ஐந்தாயிரத்து 700 டன் குப்பைகள் நான்தோறும் சேகரிக்கப்படும். ஊரடங்கு காலத்தில் இது 2,000 டன்களாகக் குறைந்தது. தற்போது ஒரு நாளைக்கு 3,200 டன் குப்பைகள் மட்டுமே சேகரிக்கப்படுகின்றன.
தூய்மைப் பணியாளர்களை வேலைக்கு அழைத்து வர 95 பேருந்துகள் இயங்கப்படுகின்றன. மேலும், மார்ச் 25ஆம் தேதியிலிருந்து தூய்மைப் பணியாளர்களுக்கு காலை மற்றும் மதியம் சுகாதாரமான உணவை வழங்கி வருகிறோம்.
தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான முகக்கவசம் தினமும் மண்டல அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் வாரத்துக்கு ஒரு முறை காட்டன் கையுறைகளும் வழங்கப்படுகின்றன. இதுவரை 46.25 லட்சம் முகக்கவசங்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கியுள்ளோம். இது கரோனா தொற்று முடிவுக்கு வரும்வரை தொடரும்.
345 மாநகராட்சி ஊழியர்கள் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பணிக்கு திரும்பியுள்ளனர். அதேபோல், 120 தூய்மைப் பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் 15 நபர்கள் பூரண குணமடைந்து பணிக்குத் திரும்பியுள்ளனர். தூய்மைப் பணியாளர்களுக்கு அந்தந்த மண்டலங்களில் பத்து நாள்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது" என்றார்.

தொடர்ந்து இ-பாஸ்கள் வழங்குவது குறித்துப் பேசிய அவர், "சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை அவசரத் தேவைக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும். இ-பாஸ் வாங்கித்தருவதாக யாராவது தொடர்பு கொண்டால், உடனடியாக மாநகராட்சி அல்லது காவல் துறையினருக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: நான் சேலத்திற்கு மட்டும் முதலமைச்சரா?