தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்று காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை இருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை கோவிட்-19 உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் சென்னையை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், சென்னையில் கரோனாவை கட்டுப்படுத்த ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உயர் கல்வித்துறை அமைச்சர் கே. பி. அன்பழகன், உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கான மண்டலங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், தூய்மை பணியாளர்கள், வீடு வீடாக சென்று
கணக்கெடுப்பவர்கள், பூச்சி தடுப்புத் துறை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை அலுவலர்கள் என மொத்தம் 38,198 நபர்கள் கரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10 நடமாடும் மாதிரி சேகரிப்பு மையங்கள் உட்பட 40 கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மையங்கள் உள்ளதாகவும் இதனால் சென்னையில் மட்டும் கிட்டதட்ட 1.5 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் உடல் நலனை 14 நாள்கள தொலைபேசி மூலம் கண்காணித்து அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை பெருநகர மாநகராட்சி மருத்துவர்கள் வழங்கிவருவதாகவும் அதில் தெவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, சென்னையில் கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள 3.47 லட்சம் நபர்களை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது.