கரோனா தொற்றால் தமிழ்நாட்டில் இதுவரை 23 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த தகவலில், சென்னை, திருச்சி ,மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு விமான நிலையங்களில் தற்போது (25ஆம் தேதி) 2 லட்சத்து 9 ஆயிரத்து 276 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 15 ஆயிரத்து 492 பயணிகள் வீட்டில் 28 நாள்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் வெளிமாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்த 86 ஆயிரத்து 644 பயணிகள் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் தொற்று அதிகளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 104 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவமனையில் தனி வார்டில் 211 பேர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். 890 பயணிகளின் ரத்தப் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன. அதில் 782 பயணிகளின் ரத்த மாதிரிகள் முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
அவற்றில் 757 பயணிகளுக்கு நோய்த்தொற்று இல்லை எனவும், 23 பேருக்கு நோய்தொற்று உள்ளது எனவும் கண்டறியப்பட்டது. 110 பேரின் ரத்தப் பரிசோதனை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சென்னை மாவட்டத்தில் 4,807 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,017 பேரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 732 பேரும், கரூர் மாவட்டத்தில் 634 பேரும் என 15,622 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவர்கள் தங்கள் இல்லத்திற்கு செல்ல வேண்டாம் - மக்கள் நல்வாழ்வுத் துறை