சென்னை: ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு வழக்கில் சோவல் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சோய் யோங் சுக், பொது மேலாளர் சோ ஜோவான் ஆகிய இரு தென்கொரிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு பிணை வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், திருச்சியில் உள்ள முகாமில் அடைத்து வைக்க உத்தரவிட்டது. தொடர்ந்து, இவர்கள் இருவரும் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களை சொந்த செலவில் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டது.
வீட்டு உதவியாளர் அளித்த புகார்
வீட்டுக்காவலில் இருந்தபோது வேறு நபர்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி கொல்கத்தா வழியாக வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டதாக, அவர்களின் வீட்டில் உதவியாளராக பணியாற்றியவர் அளித்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தாங்கள் கொடுத்த 7 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்டதற்காக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, முன்பிணை கோரி சோய் யோங் சுக், சோ ஜோவான் இருவரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
சொகுசு வாழ்வு - நீதிபதி வேதனை
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி,"இந்தியாவில் தொழில் தொடங்க அரசு பல சலுகைகளை அறிவித்துள்ளது. சில வெளிநாட்டு நிறுவனங்கள் இதை தவறாக பயன்படுத்தி பொருளாதாரத்தை நிலைகுலைய செய்கின்றனர்" என வருத்தம் தெரிவித்தார்.
தொடர்ந்து, நீதிபதி,"சட்டத்தை மதிக்கும் குடிமக்களின் பாதுகாப்புக்கு காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குற்ற வழக்குகளில் சிக்கிய தனிநபர்களின் பாதுகாப்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வீட்டுக்காவலில் சொகுசு வாழ்க்கை வாழும் இவர்கள், தப்பிச் செல்ல முயற்சித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக காவல் துறையினர் தங்களின் புலன் விசாரணையை சட்டப்படி தொடரலாம்" என கூறி, இருவரின் முன் பிணை மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஹவாலா பணம் கடத்தியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை; ரூ.1 கோடி அபராதம்