சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, திருப்பூரைச் சேர்ந்த ரகமத்துல்லா (42), பெரம்பலூரைச் சேர்ந்த கந்தவேல் (53) ஆகிய இருவரும் சார்ஜாவிற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கான வீசாவில் சென்றுவிட்டு திரும்பி வந்திருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்று, அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து விட்டுப் பின் தற்போது, திரும்பி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமும் விசாரித்தபோது, ஏமன் நாடு தடை செய்யப்பட்ட நாடு என்பது தங்களுக்கு தெரியாது என்றும் தாங்கள் தெரியாமல் போய் விட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் ஏமன் நாட்டிற்கு எதற்காகச் சென்றனர்? அங்கு அவர்கள் எவ்வளவு நாள்கள் தங்கியிருந்தனா்? யாரிடம் தொடர்பில் இருந்தனர்? உள்ளிட்டவைகள் குறித்து குடியுரிமை அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். பின்னர் இதன் தொடர்ச்சியாக, மேல் விசாரணைக்காக சென்னை விமான நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை விமான நிலைய காவல் துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தடைசெய்யப்பட்ட ஏமனுக்குச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கைது