சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற மருத்துவர் முருகேசன் (75). அவரை பணிப்பெண் ஒருவர் உடனிருந்து கவனித்து வருகிறார். அப்பணிப்பெண் அவரது வீட்டின் மேல்மாடியில் குடியிருக்கிறார். இந்த நிலையில், முருகேசன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.7 லட்சத்திற்கும் மேல் பணம் காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதையடுத்து அவர் வங்கியில் பணம் மாயமானதைக் குறித்து முறையிட்டார். அவர்கள் பேடிஎம் மூலம் பணம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். அதனால் முருகேசன் அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பேடிஎம் கணக்கை வைத்து அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
சிறுவனிடம் நடத்திய விசாரணையில், "மருத்துவரின் மேல் வீட்டில் குடியிருக்கும் பணிப்பெண்ணின் 17 வயது மகனும், இந்தச் சிறுவனும் நண்பர்கள். கடந்த மார்ச் மாதம் முருகேசன், தனது வங்கிக் கணக்கை பணிப்பெண்ணின் மகன் செல்போனிலிருந்து பயன்படுத்தி உள்ளார்.
அதைப் பயன்படுத்திக் கொண்ட பணிப்பெண்ணின் மகன், வங்கிக் கணக்கின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்டை சேமித்துவைத்துள்ளான். இதனைத் தெரிந்துகொண்ட இச்சிறுவன், பேடிஎம் செயலி மூலம் அமேசான், ஃப்ளிப்கார்ட் பொருள்கள் வாங்கியும், பப்ஜியில் ரூ.6.5 லட்சம் பணத்தை செலவழித்தும் வந்துள்ளார். மொத்தமாக ரூ.7.5 லட்சம் பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தற்போது பணிப்பெண்ணின் மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் மூலம் ரூ 2.55 லட்சம் திருட்டு