இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் விமான சேவை உள்பட அனைத்து வகை போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாட்டில் தங்கியிருந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வங்கதேசம், பிரான்ஸ் உள்ளிட பல நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சொந்த நாட்டிற்கு சிறப்பு விமானங்கள் முலமாக திருப்பி அனுப்பப்பட்டனர். அதேபோல் வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்தியர்களைச் சொந்த நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இச்சூழலில் மத்திய அரசு மே 7ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் சுற்றுலா சென்று தவிப்பவர்களை அழைத்து வர 'வந்தே பாரத்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, முதற்கட்டமாக பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வர 60க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து துபாய், குவைத், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து இயக்கப்பட்ட ஏழு சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்பட்டு, தனியார் கல்லூரி, தனியார் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டு, 14 நாள்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
அதேபோல் வங்கதேச நாட்டிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் ஆறு குழந்தைகள், 35 பெண்கள் உள்பட 157 பேர் வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலைத்திலேயே பொதுச் சுகாதாரத் துறை சார்பில், இவர்களிடம் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர், பேருந்துகள் மூலமாக 144 பேர் சென்னை மற்றும் புறநகரில் உள்ள தனியார் கல்லூரி, ஓட்டல்களில் தனிமைப்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர். எஞ்சியிருந்த 13 பேர் நெல்லூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: சென்னையிலிருந்து வங்கதேசம் சென்ற சிறப்பு விமானத்தில் 164 பேர் பயணம்