செய்முறைத் தேர்வு
மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 12, 11,10-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி இம்மாத இறுதிக்குள் முடிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 31-ம் தேதிக்குள் முடிவடைகிறது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளிகளில் இருந்து எட்டு லட்சத்து 67 ஆயிரத்து 67 மாணவர்கள் எழுதவுள்ளனர். இவர்களில் ஏழு லட்சத்து 40 ஆயிரத்து 400 மாணவர்கள் செய்முறைத் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.
இரண்டு கட்டங்களாகத் தேர்வு
சென்னையை பொறுத்தவரை இரண்டு கட்டங்களாக செய்முறை தேர்வுகள் நடைபெறுகின்றன. முதல்கட்ட தேர்வு இன்று தொடங்கியுள்ளது.
இந்த தேர்வில் 716 பள்ளிகளைச் சேர்ந்த 19 ஆயிரத்து 904 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்வில் 204 பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 528 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
சென்னையில் இன்று காலை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செய்முறைத்தேர்வில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வினை செய்தனர்.
இதுகுறித்து ஆசிரியர் மணிமாறன் கூறும்போது,
"அரசு தேர்வுத் துறையின் விதிமுறைகளின்படி மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 20 மதிப்பெண்கள் செய்முறைத்தேர்வுக்கும், 10 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது.
மரம் நட்டினால் 2 மதிப்பெண்
இந்த ஆண்டு தேர்வுத் துறையின் விதிமுறைகளின், மரம் நட்டு அதனை காண்பிக்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் அதற்குரிய ஆதாரத்தை அளித்தால் அவர்களுக்கு 2 மதிப்பெண் அளிக்கப்படும்" என தெரிவித்தார்.
![undefined](https://s3.amazonaws.com/saranyu-test/etv-bharath-assests/images/ad.png)