சென்னை: நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுவருகின்றன. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதனிடையே 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (செப்.28) ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
வீடு பக்கத்தில் கல்வி
இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைப் போக்குவதற்கு, ஒன்றிய அரசின் ”சமக்ர சிக்ஷா” திட்டத்தின் மூலம் நடப்புக் கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கற்றல் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளிலோ அல்லது வீடுகளுக்கு அருகில் முகாம் அமைத்தோ ஆசிரியர்கள் பாடம் நடத்துவர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.