ஹைதராபாத்: மருத்துவக் காப்பீட்டை பொறுத்தவரை, சிகிச்சையின்போது முதலில் நமது சொந்த பணத்தை செலவு செய்துவிட்டு, பிறகு அதை க்ளைம் செய்து காப்பட்டு நிறுவனத்திடமிருந்து வாங்கிக்கொள்ளலாம்.
இந்த நடைமுறையில் ஒரு சிக்கல் இருக்கிறது. மருத்துவமனையில் சேர்க்கும்போது பணத்தை நாம்தான் புரட்டியாக வேண்டும். இந்த சூழ்நிலையில், 'கேஷ்லெஸ் க்ளைம்' என்பது பாலிசிதாரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் ஒரு முக்கிய அம்சம் இது. மருத்துவ அவசர காலங்களில் காப்பீட்டுத் தொகை உடனடியாக கிடைக்க வழி செய்கிறது.
அதன்படி, காப்பீட்டு நிறுவனங்கள் நோயாளியை மருத்துவமனையில் சேர்க்கும்போதே காப்பீட்டுத் தொகையை செலுத்துகிறது. இருப்பினும், சில நேரங்களில் இந்த வசதியிலும் எதிர்பாராத சில பிரச்னைகள் எழுகின்றன. அவற்றைத் தவிர்க்க சில முக்கிய தகவல்களை அறிந்து வைத்திருப்பது நல்லது.
- கேஷ்லெஸ் க்ளைமில், சில நிறுவனங்கள் பார்ஷியல் கிளைம் என்ற கொள்கையை வைத்திருக்கின்றன. அதன்படி, மருத்துவ சிகிச்சைக்காக குறிப்பிட்ட தொகையை மட்டுமே காப்பீட்டு நிறுவனங்கள் கேஷ்லெஸ் க்ளைமில் உடனடியாக செலுத்தும். மீதமுள்ள தொகையை பாலிசிதாரர்கள்தான் செலுத்த வேண்டும். அதேநேரம், செலுத்தும் தொகையையும் பிறகு கிளைம் செய்து கொள்ளலாம்.
- கேஷ்லெஸ் க்ளைம் வசதியைப் பயன்படுத்த நினைப்பவர்கள், காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனையில்தான் சேர வேண்டும். பிற மருத்துவமனைகளில் சேர்ந்தால் இந்த வசதியைப் பயன்படுத்த முடியாது. அதனால், காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனைகளின் பட்டியலை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
- கேஷ்லெஸ் க்ளைமில் எந்தவித சிக்கல்களும் வராமல் இருக்க, தேவையான ஆவணங்களை சரியாக வழங்க வேண்டும். குறிப்பாக, டிபிஏ (TPA) முன் அங்கீகாரப் படிவத்தை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். டிபிஏ வழங்கும் ஹெல்த் கார்டுகளை எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது.
- மருத்துவ அவசர காலங்களில்தான் கேஷ்லெஸ் க்ளைம் வசதி பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வசதியின்படி ஆன்லைனில் பில்களை செலுத்த ஏதுவாக, வலுவான நெட்வொர்க் கொண்ட காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்வது நல்லது.
- சில சிகிச்சைகள் இந்த வசதியின் கீழ் வராது. நிறுவனங்களுக்கு ஏற்றார்போல் விதிமுறைகளும் மாறுகின்றன. வழக்கமாக, டாக்குமென்ட்டேஷன் கட்டணங்கள், மருத்துவ சோதனைகள், சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவை கேஷ்லெஸ் க்ளைமின்கீழ் வராது. எனவே, பாலிசிதாரர்கள் இதுகுறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும்.
- இந்த வசதியைப் பயன்படுத்தும்போது, காப்பீட்டு நிறுவனம் அல்லது டிபிஏ அல்லது பாலிசிதாரர் ஏதேனும் தவறு செய்தால், பாலிசிதாரரே இறுதியில் நஷ்டம் அடைவார். அதனால், பாலிசியை எடுப்பதற்கு முன்பு, அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டு, கவனத்துடன் செயல்பட வேண்டும்.
- நெட்வொர்க் மருத்துவமனைகள், பாலிசியில் உள்ள நோய்களின் பட்டியல், காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் விலக்குகள் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும். அதேநேரம், க்ளைம் செய்யும்போது காப்பீட்டு நிறுவனத்தின் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இதையும் படிங்க: குறுகிய கால முதலீடுகளுக்கு கூடுதல் எச்சரிக்கை தேவையா?