இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று திடீர் எழுச்சியுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. மும்பைப் பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் வரை உயர்ந்து, 28,963.25 புள்ளிகள் என வர்த்தகம் நடக்கிறது. தேசியப் பங்குச் சந்தையைப் பொறுத்தமட்டில் நிஃப்டி, 347.95 புள்ளிகள் வரை அதிகரித்து, 8,431.75 என்ற பழைய நிலைக்குத் திரும்பியது.
வங்கி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பங்குகள் ஆதாய நிலையில் உள்ளன. அதேநேரத்தில் பஜாஜ் நிதி நிறுவன பங்குகள் வீழ்ச்சியில் வர்த்தகமாகிவருகின்றன. தற்காலிகப் பரிவர்த்தனை தரவுகளின்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மூலதன சந்தையில், நிகர விற்பனையாளர்களாக இருந்தனர்.
ஏனெனில், அவர்கள் 1,960.97 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர். மகாவீர் ஜெயந்தி காரணமாக, திங்கட்கிழமை சந்தை மூடப்பட்டது. நாட்டில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் குறித்து கவலைகள் இருந்தபோதிலும், உள்நாட்டு பங்குகள் உலகளாவிய பங்குகளிலிருந்து நேர்மறையான குறிப்புகளை எடுத்துக்கொண்டு உயர்ந்து வருகின்றன என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகளாவிய கச்சா எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் கச்சாவின் எதிர்காலம் பீப்பாய்க்கு, 2.66 சதவீதம் உயர்ந்து 33.93 அமெரிக்க டாலராக உள்ளது. புதிய நம்பிக்கையின் பேரில், இந்த வாரம் ஒபெக் தலைமையிலானக் கூட்டம் அதிகப்படியான விநியோகத்தைக் குறைப்பதற்கும், சந்தையை உயர்த்துவதற்கும் ஒரு உடன்பாட்டை எட்டும் என தெரிகிறது.
நாட்டில் கரோனா (கோவிட்-19) வைரஸ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை நான்கு ஆயிரத்து 400க்கும் அதிகமாகவும், இறப்பு எண்ணிக்கை 100க்கும் அதிகமாகவும் இருப்பதாக சுகாதார அமைச்சகம் பதிவு செய்துள்ளது. உலகளாவிய கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியுள்ளது. 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.