இந்திய பங்குச் சந்தை இரண்டாம் நாளாக இன்றும் ஏறுமுகத்தில் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட 400 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. தற்போது சென்செக்ஸ் 35 புள்ளிகள் அதிகரித்து 31,778 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 12 புள்ளிகள் அதிகரித்து 9294 புள்ளிகளிலும் வர்த்தகமாகிவருகின்றன.
ஏற்றம்- இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக இன்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் எட்டு விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்தது. அதைத்தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி, டெக் மஹிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் வங்கி, எஸ்பிஐ ஆகியவற்றின் பங்குகள் உயர்ந்தன. மறுபுறம் சன் பார்மா, ஹெச்.சி.எல். டெக், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பாரதி ஏர்டெல் ஆகியவற்றின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
திங்கள்கிழமை வர்த்தகத்தின்போது மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 916.42 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.
காரணம் என்ன?
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு உதவ ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு மற்றுமொரு மீட்டெடுப்புத் திட்டத்தை அறிவிக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்புவதாலும் இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் ஆசிய சந்தைகள் பலவீனமாக இருப்பதாலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்துவருவதாலும் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் தொடரும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
சர்வதேச பங்குச் சந்தை
ஷாங்காய், ஹாங்காங் ஆகிய சர்வதேச பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்திருந்தாலும் டோக்கியோ, சியோல் பங்குச் சந்தை சரிவையே சந்தித்தன. அமெரிக்காவின் வால் ஸ்டீரிட் பங்குச் சந்தையில் நள்ளிரவு வர்த்தகம் ஏற்றம் கண்டது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 2.77 விழுக்காடு குறைந்து பேரல் ஒன்றுக்கு 22.43 அமெரிக்க டாலர்களாக வர்த்தகமாகிவருகிறது. அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை 14.8 விழுக்காடு குறைந்து பேரல் ஒன்றுக்கு 10.88 அமெரிக்க டாலர்களாக வர்த்தகமாகிவருகிறது
இதையும் படிங்க: சீனா மீதான வெறுப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - நிதின் கட்கரி