2019-20ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப்பின் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி தொடர் சரிவைச் சந்தித்துவருகின்றன. பெரு நிறுவனங்களுக்கான 25 விழுக்காடு வரி, சி.எஸ்.ஆர். நடைமுறையில் மாற்றம் போன்ற பெரு நிறுவனங்களுக்குப் பாதகமான சில நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.
இதன் விளைவாக பங்குச்சந்தையானது ஜூலை முதல் வாரம் தொடங்கி தொடர்ச்சியாக வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. இந்நிலையில், இன்று வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 453 சரிவைச் சந்தித்துள்ளது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 130 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் செய்துவருகிறது. இந்த வீழ்ச்சியானது மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.