ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கான இந்த விவரம் நேற்று இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
சென்ற நிதியாண்டின் நான்கு காலாண்டுகளுக்குமான தரவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2019-20இல் 4.2 விழுக்காடாக உள்ளது.
இதுதான் கடந்த 11 நிதியாண்டுகளிலேயே மிகவும் குறைவான வளர்ச்சி விகிதமாகும். கரோனா வைரஸ் முடக்கநிலை காரணமாக, தொழில்துறை முடங்கியபின் முதல் முறையாக, இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. இதற்கு முந்தைய மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.7 விழுக்காடாக இருந்தது.
கரோனா வைரஸ் பரவலால், கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ளதால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் எப்படியும் சரியும் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். எனினும், சென்ற நிதியாண்டு முடிய சில நாட்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், முடக்கநிலை அறிவிக்கப்பட்டதால், கரோனா வைரஸால் உண்டான முழுமையான பொருளாதாரப் பாதிப்பு, நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டுக்கான தரவுகள் வெளியாகும்போது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியா, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பொருளாதார வளர்ச்சியில் வலுவான முன்னேற்றத்தைக் கண்டதாகவும், ஆனால் மார்ச் மாதத்தில் தொடங்கிய நாடு தழுவிய முடக்க நிலை வளர்ச்சியைக் கடுமையாகக் குறைத்துள்ளது என்றும்; பொருளாதார வல்லுநர்களை கொண்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமை நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் கடைசி காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் வெறும் 2.1 விழுக்காடு வளர்ச்சியை மட்டுமே கண்டிருக்கக் கூடும் என்றும் 52 பொருளாதார வல்லுநர்களைக் கொண்டு ராய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இது கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பிறகான காலகட்டத்தில் பதிவாகும் குறைந்தபட்ச வளர்ச்சியாக இருக்கும்.
2019-20ஆம் நிதியாண்டில் கடைசி காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3.1 விழுக்காடாக குறைந்துள்ளது.
இதையும் படிங்க: உலகளவில் 15ஆயிரம் ஊழியர்களை கைவிடுகிறது ரெனால்ட் நிறுவனம்!