ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த மாதம் லிப்ரா என்ற புதிய கிரிப்டோ கரன்சியை 2020-இன் தொடக்கத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்தது. சுமார் 27 நிறுவனங்களின் முதலீட்டில் உருவாக்கப்படும் இந்த கிரிப்டோ கரன்சியின் அறிவிப்பு வெளியான நாள் முதல் பல நாட்டு அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தன.
சமீபத்தில் பாரிஸ் நாட்டில் நடைபெற்ற G - 7 அமைச்சர்கள் கூட்டத்தில் ஃபேஸ்புக்கின் இந்த முடிவு மிகவும் ஆபத்தானது என்றும் இதன்மூலம் ஒட்டுமொத்த சர்வதேச பொருளாதார கட்டமைப்பும் சிதறிவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஸ்விட்சர்லாந்து அரசும் லிப்ரா கிரிப்டோ கரன்சியை கண்காணிக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், ”நாங்கள் தெளிவாகத் திட்டமிட்டே லிப்ரா கிரிப்டோ கரன்சியை உருவாக்கிவருகிறோம். லிப்ரா என்பது எங்கள் பல வருட கனவு. ஒவ்வொரு பிரச்னையாக களையப்பட்டு, எவ்வளவு காலம் ஆனாலும் லிப்ரோ வெளியாவது உறுதி" என்றார்.
ஃபேஸ்புக்கின் லிப்ரா வெளியானால் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல செயலிகள் மூலம் உலகில் எந்த இடத்தில் உள்ள ஒரு நபருக்கும் எளிதாக பணம் அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.