கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துவருகின்றன.
டெல்லி அரசின் மதிப்புக் கூட்டு வரி காரணமாக அங்கு பெட்ரோலின் விலையைவிட டீசலின் விலை அதிகமானது. நான்கு நாள்களாக எவ்வித விலை ஏற்றத்தையும் சந்திக்காத டீசல் விலை, இன்று 15 பைசா உயர்த்தப்பட்டது. இதன் மூலம் தலைநகரில் ஒரு லிட்டர் டீசல் விலை 81.79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை டீசல் விலை லிட்டருக்கு 12 பைசா வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் கடந்த ஜூன் 29ஆம் தேதி ஐந்து பைசா உயர்த்தப்பட்ட பெட்ரோலின் விலை அதன்பின் உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாக டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை தொடர்ந்து 80.43 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லி அரசின் புதிய மதிப்புக் கூட்டு வரி காரணமாக இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக பெட்ரோலை விட டீசல் விலை அதிகமானது.
இந்தியாவில் பெட்ரோல் விலையைவிட எப்போதும் டீசல் விலை ஆறு முதல் ஒன்பது ரூபாய் வரை குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக தனிப்பட்ட போக்குவரத்து வாகனங்கள் பெட்ரோலில் இயங்கும் வகையிலும், சரக்கு மற்றும் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் டீசலில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், தற்போது டீசலின் விலை பெட்ரோலைவிட அதிகமாக உள்ளதால், பொதுப் போக்குவரத்து துறையில் இருப்பவர்களும் சரக்குப் போக்குவரத்தில் இருப்பவர்களும் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
அதேபோல ஒரு லிட்டர் பெட்ரோல் மும்பையில் 87.19 ரூபாய்க்கும் சென்னையில் 83.63 ரூபாய்க்கும் கொல்கத்தாவில் 82.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால் இந்தியாவில் மார்ச் 16ஆம் தேதி முதல் 82 நாள்களுக்கு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நிறுத்திவைக்கப்பட்டது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 7ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வைச் சந்தித்துவருகிறது. அதன் பின்னர் பெட்ரோல் விலை 9.5 ரூபாயும் டீசல் விலை 12 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள்