டெல்லி : கோவிட்-19 தாக்கம் காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திக்குமுக்காடி வருகின்றன. எரிபொருளின் தேவை குறைந்து வருவதால் பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.
இச்சமயத்தில், பெரும்பாலான நிறுவனங்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. தனியார்மயமாக்கலுக்கு தயாராகி வரும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனம் அதன் மூன்று சுத்திகரிப்பு ஆலைகளின் மூலம் ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 70 விழுக்காடு கொள்ளளவுள்ள எரிபொருளை உற்பத்தி செய்தது.
ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருளின் தேவை குறைந்து விட்டதால், இம்மாதத்திற்கான உற்பத்தியை நிறுத்த நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் ரிலையன்ஸ் நிறுவனமும் தனது உற்பத்தியை நிறுத்த வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) ஜூலை மாதத்தில் உற்பத்தியை 15-20 விழுக்காடு குறைத்தது. மேலும், பார்த் பெட்ரோலியம் நிறுவனத்தைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் இந்நிறுவனமும் உற்பத்தியை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் உற்பத்தியில் பெரும் லாபம் ஈட்டிய இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஜூன் மாதத்தில் சற்று பின்தங்கியுள்ளது. கோவிட் -19 தாக்கத்தின் காரணமாக மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகள், விரிவாக்கம் செய்யும் பணிகளை 2021ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைத்துள்ளன.