இது குறித்து ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) வெளியிட்டுள்ள மாதாந்திர உணவு பட்டியல் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கரோனா அச்சம் காரணமாக மக்கள் மத்தியில் தேவை குறைந்து வருவதால் பொருள்களின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைகின்றன. தற்போது விலைகளின் ஒட்டுமொத்த குறியீட்டு எண் 4.3 சதவீதம் சரிந்தது காணப்படுகிறது. இது இந்த ஆண்டின் மிகப் பெரிய சரிவாகும்.
பொருட்களின் விலை குறைந்த போதிலும், விற்பனை அதிகரிக்கவில்லை. பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது காய்கறி எண்ணெய் விலை 12 சதவீதம் குறைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பயோ டீசலுக்கான தேவை கணிசமாகக் குறைந்துவிட்டதால் சோயா மற்றும் ராப்சீட் எண்ணெய்க்கான விலைகள் சரிந்தன.
சர்க்கரை பொருட்கள் வீழ்ச்சி கடந்த மாதத்தில் மட்டும் 19.1 சதவீதமாக உள்ளது. இதற்கு உலகம் முழுவதும் பார்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டதும் ஒரு காரணம். தானியங்களுக்கான விலையை பொறுத்தமட்டில் குறியீட்டெண் 1.9 சதவீதம் சரிந்துள்ளது. இதில் அரிசி தவிர அனைத்து தானியங்களின் ஏற்றுமதி விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.
இந்தியா மற்றும் சீனாவில் தேவை அதிகரித்ததையடுத்து வியட்நாமில் ஏற்றுமதி அரிசி விலைகள் மட்டும் சற்று உயர்வை சந்தித்துள்ளன. மற்ற துணைக் குறியீடுகளில், பால் விலைகள் 3 சதவீதம் சரிந்தன. இறைச்சி விலைகள் (0.6 சதவீதம்) மிகச்சிறிய சரிவைக் கண்டுள்ளன.
போக்குவரத்து முடக்கம் காரணமாக மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சிகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் பல இடங்களில் கறிக்கோழி இறைச்சி தங்குதடையின்றி கிடைத்தது. விலையில் பெரிய வித்தியாசம் இல்லை.
இவ்வாறு ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா., வெளியிடும் மாதாந்திர உணவு விலைக் குறியீடு என்பது 23 உணவுப் பொருட்களின் உலகளாவிய விலைகளை அடிப்படையாகக் கொண்டது. கரோனா பரவல் அச்சம், வதந்தி காரணமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் சரிவை சந்தித்தது நினைவுக் கூரத்தக்கது.