கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வணிக நிறுவனங்கள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.
இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் குழுமம் தனது பெரும்பாலான ஊழியர்களின் சம்பளத்தை 10 முதல் 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது.
மேலும், தனியார் கூட்டு நிறுவன அறிக்கையின்படி, முதல் காலாண்டில் செலுத்தப்படும் வருடாந்திர போனஸ், செயல்திறன் சலுகைகளையும் ஒத்திவைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதியிலிருந்தே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தனிநபர், ரயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்துகளுக்கு தடை விதிக்கப்பட்டு, வணிக நிறுவனங்கள் மூடவும் உத்தரவிடப்பட்டது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட பொருள்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்களுக்கான தேவைகள் மக்களிடம் குறைந்து காணப்பட்டதன் காரணமாக ரிலையன்ஸ் ஹைட்ரோகார்பன் வணிகம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்திலுள்ள பல நிறுவனங்களின் தலைவர்கள் ஊழியர்களுக்கான ஊதியத்தினைக் குறைக்குமாறு வலியுறுத்திவந்தனர். இதையடுத்து, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அம்பானியின் ஊதியத்திலிருந்து 15 கோடி ரூபாயும், நிர்வாக இயக்குநர்கள், நிர்வாக குழு (இ.சி) உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட ரிலையன்ஸ் வாரிய இயக்குநர்களின் ஊதியத்திலிருந்து 30 முதல் 50 விழுக்காடு வரை குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 15 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு ஊதியம் பெறுபவர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படாது எனவும், ஆனால் அதிகளவு ஊதியம் பெறுபவர்களுக்கு 10 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை ஊதியம் பிடித்தம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
2008-09 ஆண்டு முதல் ரிலையன்ஸ் குழுமத் தலைவரின் ஊதியம் 24 கோடி ரூபாய்க்கு குறையாமல் உள்ள நிலையில் அவர் தற்போது தனது வருவாயிலிருந்து 15 கோடியை இழக்கவுள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நிலைகளை ரிலையன்ஸ் குழுமம் உன்னிப்பாக கவனித்துவருவதாகவும், தங்களது வருவாயினை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளது.
உற்பத்தித்திறன், செயல்திறன், வருவாயில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை உருவாக்கவும், வணிக செயல்முறைகளை மறுசீரமைக்கவும், டிஜிட்டல் மய வணிகத்தை ஊக்குவிக்கவும் ஊரடங்கு வழிவகுத்துள்ளதாகவும், தாங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இயல்பு நிலைக்கு விரைவில் திரும்புவோம் என்றும் கூறியுள்ளது.
இதையும் பார்க்க:’ஊதியம் வேண்டாம் தானியம் கொடுங்கள்’