நாட்டின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தை (MPC) இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மும்பையில் ரிசர்வ் வங்கி நடத்துவது வழக்கம். ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வட்டி விகிதம் உள்ளிட்ட முக்கியக் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு, கடந்த 3ஆம் நிதிக் கொள்கைக் கூட்டத்தை நடத்தியது. அதன் அறிவிப்புகள் இன்று மும்பையில் வெளியிடப்பட்டன.
வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள 5.15 விழுக்காடு வட்டி விகிதமே, அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடரும் என ரிசர்வ் வங்கி சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று கூட்டங்களில் ரெப்போ வட்டி தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டுவந்த நிலையில், ரிசர்வ் வங்கி எடுத்துள்ள இம்முடிவு சந்தையில் ஏற்படுத்தும் மாற்றம் அடுத்த வாரத்தில் தெரியவரும்.
நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை 6.1 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்து மதிப்பிட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சி விகிதத்தை ரிசர்வ் வங்கியே குறைத்து மதிப்பீடு செய்துள்ளது பொருளாதார மந்த நிலையை உறுதிப்படுத்தும் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 451.7 பில்லியன் அமெரிக்க டாலராக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'ஆண்டி முதல் அரசாட்சி வரை' - இது நித்தியின் தாண்டவம்!