நாட்டின் பொருளாதார மந்த நிலை உச்சத்தை அடைந்து வருவதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் அனைத்தும் தெரிவிக்கின்றன. மக்களின் வாங்கும் திறனும், வணிக நடவடிக்கையும் பெரும் சரிவைச் சந்தித்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகின. அரசு சார்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தைத் தற்போது பொருளாதார நிபுணர்கள் கையிலெடுத்துள்ளனர்.
நாட்டின் புள்ளி விவரங்களைக் கணக்கிட்டு ஆய்வறிக்கை வெளியிடும் அரசு நிறுவனமான என்.எஸ்.எஸ்.ஓ (N.S.S.O) அமைப்பின் ஆய்வறிக்கையைத் தாமதப்படுத்தாமல், மத்திய அரசு உடனே வெளியிட வேண்டும் என நிபுணர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முன்னணி நிபுணர்களும் கல்வியாளர்களுமான வைத்தியநாதன், அபிஜித் சென், மைத்ரேஷ் கடக், பிரபாத் பட்நாயக், தாமஸ் பிக்தே உள்ளிட்ட 200 பேர் 75ஆவது நுகர்வோர் செலவீன ஆய்வறிக்கையைத் தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என கடிதம் எழுதியுள்ளனர்.
'அரசு வெளிப்படைத்தன்மையுடன் தனது பொறுப்பைச் சரிவர மேற்கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார நடவடிக்கை குறித்து உண்மைத் தன்மையைக் கண்டறிய இது உதவும்' எனக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்திய சினிமா ஐகான்களால் களைகட்டிய கோவா சர்வதேச திரைப்படவிழா