மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், “ரயில் சரக்கு போக்குவரத்தில் மதுரை ரயில்வே கோட்டம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவருகிறது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து இரண்டாவது முறையாக 25 ரயில் பெட்டிகளில் டிராக்டர்கள் வங்கதேசத்தில் உள்ள பேனாபோல் என்ற ரயில் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 23 லட்சத்து 15 ஆயிரத்து 954 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிதியாண்டில் தூத்துக்குடியிலிருந்து விவசாய உரப் பொருள்கள், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரி, மானாமதுரையிலிருந்து கருவேலங்கரி, வாடிப்பட்டியிலிருந்து டிராக்டர்கள் ஆகியவை முதன்முறையாக ஒரேநாளில் அதிகபட்சமாக 306 ரயில் பெட்டிகளில் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 302 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.