நாடு முழுவதும் அமலில் இருந்த பல்வேறு மறைமுக வரிகளுக்கு பதிலாக ஜிஎஸ்டி என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை நிர்வகிக்க அருண் ஜேட்லி தலைமையில், அனைத்து மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த குழு, வரி விதிப்பு, வரி விகிதங்களில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்த வருகிறது.
இந்த நிலையில், கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி போன்றவற்றிற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் போன்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க வேண்டும் என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஜிஎஸ்டி கவுன்சில் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் வெற்றி பலவற்றுக்கும் முன் மாதிரியாக திகழ்கிறது. இதற்கு முந்தைய 34 கூட்டங்களிலும் பல்வேறு விவகாரங்கள் குறித்து நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்போது தேச வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் கல்வி, ஊரக வளர்ச்சி, விவசாயம் ஆகியவற்றில் ஜிஎஸ்டி கவுன்சிலின் மாதிரியைப் பின் பற்றி தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும்", என்றார்.