இந்தியாவின் ஜிடிபி விகிதம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சரிவை சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் முதல் காலாண்டிற்கான ஜிடிபி விகிதத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 29.3 சதவிகிதம் ஜிடிபி சரிவைச் சந்தித்துள்ளது. முன்னதாக, இந்தியாவின் வறட்சி ஆண்டாகக் கருதப்பட்ட 1979ஆம் ஆண்டில், இந்தியப் பொருளாதாரம் பெருமளவு சுருங்கியது. அப்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 5.2 சதவிகிதமாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு கரோனா தொற்று காரணமாக அமலுக்கு வந்த ஊரடங்கு, இந்தியாவின் பொருளாதார விகிதத்தை பெரிய அளவில் பாதித்துள்ளது.
மேலும், 2020-21ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சந்தை மதிப்பு 25.53 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இது 2019-20ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 33.08 லட்சம் கோடியாக இருந்தது. வருகிற 2020 ஜூலை - செப்டம்பர் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகள் குறித்த அறிவிப்பு வரும் 27-11-2020 அன்று வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.