நாட்டில் கரோனா பாதிப்பு காரணமாக நடப்புக் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜி.டி.பி. 23.9 விழுக்காடு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதுதொடர்பாக மூத்த பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறியீடான ஜி.டி.பி. பெரும் சரிவைச் சந்தித்துள்ளது ஒரு எச்சரிக்கை மணியாகும். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இத்தாலியைக் காட்டிலும் பெரும் பொருளாதார பாதிப்பை இந்தியா சந்தித்துள்ளது மிகவும் மோசமான நிலையைக் குறிக்கிறது.
சேவைத் துறையில் அரசு செலவுகளை மேற்கொண்டு பொருளாதார நடவடிக்கையை ஊக்குவிக்க வேண்டும். அரசு இதில் தயக்கம் காட்டுவது தவறான யுக்தியாகும். முடக்கத்திலிருந்து வெளிவந்த ஆரம்ப காலத்தில் காணப்பட்ட சிறு முன்னேற்றம் தற்போது முடக்கத்தைக் கண்டுள்ளது கவலை அளிக்கிறது.
உலக நாடுகள் தற்போது மீண்டுவரும் நிலையில், ஏற்றுமதியை ஆயுதமாகப் பயன்படுத்தி இந்தியா அரசு வர்த்தக நடவடிக்கையை ஊக்குவிக்க வேண்டும். அரசு அவநம்பிக்கை மனப்பான்மையிலிருந்து மீண்டு சாதுர்யமான முறையில் செயல்படுவது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சங்கிலி தொடரால் சரியும் பொருளாதாரம்... மீட்பது எப்படி?