மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் சார்பில் நாட்டின் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பானது திரிபுரா மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பொதுச் சேவை மையங்கள் மூலம் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
வீடு வீடாகச் சென்று மக்களின் பொருளாதார நிலையைக் கண்டறியும் முயற்சியான இந்தப் பணியில் மொத்தம் ஆறாயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பொருளாதாரக் கணக்கெடுப்பு தலைமை அலுவலர் அரூப் குமார் சந்தா, இந்தப் பணி நிறைவடைய மொத்தம் மூன்று மாதங்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்தக் கணக்கெடுப்பு முடிந்தவுடன் புள்ளிவிவரங்கள் ஆராயப்பட்டு விரைவில் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என குறிப்பிட்ட அவர், மேலும் பொதுமக்களின் அனைத்து விவரங்களையும், தரவுகளையும் அரசு பாதுகாப்புடன் வைத்திருக்கும் என உறுதியளித்துள்ளார்.