டெல்லி: ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 20 கோடி ரூபாயை ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு-சேவை வரி வசூலாக மத்திய அரசு பெற்றுள்ளது. இந்தச் சரக்கு-சேவை வரி வசூல் விகிதமானது 2020ஆம் ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 30 விழுக்காடு அதிகமாகும்.
ஆகஸ்ட் மாதத்தில் வசூலாகியுள்ள இந்தச் சரக்கு-சேவை வரி வசூலில் மத்திய சரக்கு-சேவை வரி 26,605 கோடி ரூபாயும், மாநில சரக்கு-சேவை வரி 26,605 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி 56,247 கோடி ரூபாயும் அடங்கும் (இதில் இறக்குமதி வரியாக 26,884 கோடி ரூபாயும் அடங்கும்). மேல் வரி (செஸ் வரி) 8,646 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இதிலும் 646 கோடி ரூபாய் இறக்குமதி மீதான செஸ் வரியாகும்.
இந்தியாவில் தற்போது கரோனா தடுப்பூசிகளும் அதிகளவில் போடப்பட்டுவருகின்றன. இதன் காரணமாக விரைவில் நாடு இயல்புநிலைக்குத் திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தொடர்ந்து சரக்கு-சேவை வரி வசூல் விகிதமும் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக இருந்துவந்த நிலையில், ஜூன் மாதத்தில் கரோனா இரண்டாவது அலை வீரியத்தின் காரணமாக மீண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழாக இருந்தது.
மத்திய, மாநில அரசுகளால் பல ஊரடங்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தற்போது பெருநிறுவனங்கள் முதல் சிறு, குறு நிறுவனங்கள் ஓரளவுக்கு முழுமையாகச் செயல்பட ஆரம்பித்துள்ளன. எனவே வரும் மாதங்களில் சரக்கு-சேவை வரி வசூல் புதிய உச்சங்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.