2012ஆம் ஆண்டுக்குப்பின் நாட்டில் உள்ள வங்கிகள் பெரும் நிதிச்சுமையில் சிக்கித்தவித்தன. வாராக்கடன் பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 2017ஆம் ஆண்டு உச்சத்தைத் தொட்டது.
இதனால் தொழில்முனைவோருக்குக் கடன் வழங்குவதை வங்கிகள் வெகுவாக குறைத்தன. ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரத்தின்படி 2017ஆம் ஆண்டில் நாட்டின் கடன் வளர்ச்சி 4.54 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 1963ஆம் ஆண்டுக்குப்பின் கடன் வளர்ச்சி பெரும் பின்னடைவை 2017ஆம் ஆண்டில்தான் சந்தித்தது.
இந்நிலையில், நிதியமைச்சகம் திவால் சீர்திருத்தச் சட்டம், ரியல் எஸ்டேட் சீர்திருத்தச் சட்டம் போன்ற சீர்திருத்த நடவடிக்கையைத் துரிதமாக மேற்கொண்டது. அதன் விளைவாக ஓராண்டில் வங்கிகள் ஆரோக்கியமான வளர்ச்சி கண்டுள்ளது. 2018-19 நிதியாண்டில் இந்திய வங்கிகளின் ஒட்டுமொத்த வைப்புநிதி 125.30 லட்சம் கோடியாகவும், கடன் வளர்ச்சி 96.45 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கடன் வளர்ச்சி 13.24 சதவிகிதமாகவும், வைப்பு நிதி 10.03 சதவிகிதமாகவும் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பட்சத்தில் வாரக்கடன் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.