முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவர், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்தார்.
அந்த நிதிநிலை அறிக்கையில், வரும் 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயர்த்தப் போவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
இத்தகைய பொருளாதார உயர்வை இந்தியா சந்திக்க முந்தைய காங்கிரஸ் அரசின் திறமையான ஆட்சியே காரணம் என பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டார். மேலும், காங்கிரஸ் நாட்டிற்கு ஒன்றும் செய்யவில்லை என்று கூறுபவர்கள் 5 லட்சம் கோடி டாலர் வானத்திலிருந்து ஒன்றும் குதித்துவிடவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பூஜ்ஜியத்திலிருந்த இந்தியப் பொருளாதாரம் முன்னாள் பிரதமர் நேரு உருவாக்கிய ஐ.ஐ.டி., இஸ்ரோ, ஐ.ஐ.எம். போன்ற அமைப்புகளாலும், 90களில் நரசிம்ம ராவ்-மன்மோகன் சிங் உருவாக்கிய புதிய பொருளாதாரக் கொள்கை போன்றவற்றாலும்தான் இத்தகைய உயர்வை சந்தித்ததாக பெருமிதத்துடன் கூறினார்.
55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் ஆட்சி தேசத்துக்கு ஒன்றும் செய்யவில்லை என பிரதமர் மோடியும் பாஜகவினரும் குற்றம்சாட்டிவரும் நிலையில், பிரணாப் முகர்ஜியின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.