உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. மக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இருப்பினும் வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கும் சமயத்தில், கடை வியாபாரிகளிடமிருந்து இடைவெளியைப் பின்பற்றினாலும், பணம் செலுத்த அருகில் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதுமட்டுமின்றி பணத்தில் மூலமாகவும் கரோனா தொற்று பரவலாம் என்ற தகவலும் பரவி கொண்டிருந்தது. அப்போது தான், பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பேமெண்ட் பக்கம் தங்களது கவனத்தை திருப்பினர்.
சுமார் ஒரு மீட்டர் தூரத்தில் நடைபெறும் டிஜிட்டல் பெமேண்ட்டில் 5 நொடிக்கும் குறைவான நேரத்தில் பணம் பரிமாற்றம் நடைபெறுகிறது. இந்த எளிய செயல்முறை உலகெங்கிலும் உள்ள வணிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
முதலில் பெரும்தொகையை செலுத்தி வந்த மக்கள், தற்போது 10 ரூபாய் செலுத்தவும், அண்ணா கூகுள் பே, ஃபோன் பே உள்ளதா என்று தான் கேட்கிறார்கள். காலத்தில் கட்டாயத்தை உணர்ந்த சாலையோர வியாபாரிகளும் தங்களை அப்கிரேட் செய்துகொண்டுள்ளனர்.
டிஜிட்டல் பேமெண்ட் தொடர்பாக சாலையோர வியாபாரி ஒருவர் கூறுகையில், " டிமானிடைசேஷன் ஏற்பட்ட சமயத்தில் தான், பயனர்கள் டிஜிட்டல் பேமெண்ட் செய்வதை பார்த்தோம்.
இருப்பினும், இன்று நாம் காணும் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் சிறியதாக இருந்தது. இந்த வைரஸ் தொடுதலின் மூலம் பரவக்கூடும் என்பதால், வாடிக்கையாளர்கள் QR குறியீடு தொழில்நுட்பத்தின் மூலம் பணம் செலுத்துவதால் நிம்மதியாக உள்ளனர்.
ஆரம்பத்தில் டிஜிட்டல் முறைக்கு மாற்றிக்கொள்வது கடினமாக இருந்தது. அதற்கு தேவையான ஸ்மார்ட்போன் வாங்குவதற்கும் கூட பணம் இல்லாத சூழ்நிலையில் இருந்தேன். ஆனால், டிஜிட்டல் பணி பரிமாற்றத்தின் தேவையை எனது குழந்தைகள் உணர்த்தினார்கள். குழந்தைகளின் உதவியோடு ஸ்மார்ட்போனில் ஆன்லைன் பேமெண்ட் குறித்து கற்றுக்கொண்டேன்" என்றார்
இதை தொடர்ந்து டெய்லர் பைசுதீனிடம் பேசுகையில், " இந்த ஆன்லைன் பணப்பரிமாற்றத்தை எனது புதிய நண்பணாக தான் பார்த்தேன். முதலில், எனக்கு 37 ரூபாய் செலுத்த வேண்டும் என்றால், மக்கள் 35 ரூபாய் தான் வழங்குவார்கள்.
சில்லறை இல்லை என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிடுவார்கள் ஆனால், அந்த இரண்டு ரூபாய் எனது வாழ்வாதாரத்திற்கு முக்கியம் என்பதை அவர்கள் அறியவில்லை. ஆனால், தற்போது டிஜிட்டல் பேமெண்ட் மூலமாக இப்பிரச்னை முற்றிலுமாக தீர்ந்தது. எனது ஊதியம் சரியாக கிடைத்தால் வருடாந்திர வணிக வருவாய் இரட்டிப்பாகியுள்ளது.
தற்போது, எனக்கு தொகை மட்டும் ஆன்லைனில் வருவது இல்லை, எனது சொந்த பயன்பாட்டு கட்டணங்களையும் நான் ஆன்லைனில் தான் செய்கிறேன்" என்றார்.