இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 வங்கிகளில், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வரையில் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற அவரை நாடு கடத்தி அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இந்நிலையில், கடன் மோசடி தொடர்பாக, எஸ்.பி.ஐ. வங்கி தலைமையில் கடன் வாங்கிய 17 வங்கிகள் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. அதனைத் தொடர்ந்து, விஜய் மல்லையாவிற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
அவரின் பல சொத்துகளை வங்கிகள் குழுமத்துக்கு வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், இந்த உத்தரவை எதிர்த்து மல்லையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இங்கிலாந்தில் கைதாகி பிணையில் உள்ள விஜய் மல்லையா மீது பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது
சர்வதேச அளவிலான சொத்துக்கள் முடக்கம்
இந்நிலையில், தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்க பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விஜய் மல்லையாவுக்கு எதிரான இந்த உத்தரவால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதியிலிருந்து வழங்கப்பட்ட கடனுக்கு 11.5 விழுக்காடு வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு, கூட்டு வட்டியும் சேர்த்து வசூலிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018இல் வங்கிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திவால் மனுவிற்கு, தற்போது அதிரடியாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது வங்கி குழுமத்திற்கு இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 1991 நெருக்கடியைவிட வரும் நாட்கள் கடுமையானதாக இருக்கும் - மன்மோகன் சிங்