கோவிட்-19 தொற்று காரணமாக பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அறிவித்தன. ஊரடங்கு காரணமாக பல நாடுகளிலும் வேலையிழப்பு என்பது சமீபத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்துவருகிறது. வேலையிழப்பையும் நாட்டின் பொருளாதார இழப்பையும் சமாளிக்க பல நாட்டு அரசுகளும் திணறிவருகிறது.
இந்த கோவிட்-19 தொற்று காரணமாக பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆட்டோமொபைல் துறை கரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜாகுவார் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை வேலையைவிட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் ஜாகுவார் வாகன விற்பனையில் சுமார் 30.9 விழுக்காடு வரை சரிவைச் சந்தித்துள்ளதாக அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று ஜாகுவார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிறுவனத்தை மாற்றவும், செயல்திறனை அதிகரிக்கவும் சில கடினமான முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம்.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களில் சிலரை வேலையைவிட்டு நீக்க முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாகுவார் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆள்குறைப்பு ஜூலை மாத இறுதியில் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிவரை தொடரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
இது குறித்து ஒருங்கிணைந்த பிரிட்டன் தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்டோமொபைல் துறைக்கும், அதை நம்பியுள்ளவர்களுக்கும் விழும் மற்றொரு அடியாக இது அமைந்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளைப் போல ஆட்டோமொபைல் துறையை காக்க பிரிட்டன் அரசு ஒரு ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நடப்பு காலாண்டில் வரி வருவாய் 31 விழுக்காடு வீழ்ச்சி