சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) 2019-20ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பை 7% ஆகக் குறைத்துள்ளது. மேலும், 2020-21 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை, முந்தைய மதிப்பீடான 7.5% லிருந்து 7.2% ஆகக் குறைத்ததுள்ளது.
இதன் விளைவாக இன்று இந்தியப் பங்குச் சந்தை பெரும் இழப்பைச் சந்தித்தது. இன்று காலை 11:40 மணி வர்த்தகத்தின் படி மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செஸ் 263.55 புள்ளிகளை இழந்து 37,719.19 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 97.40 புள்ளிகளை இழந்து 11,233.65 புள்ளிகளாக இருந்தது.
இன்றைய பங்கு வர்த்தக நேரத்தில் வேதாந்தா, இந்தஸ்இந்த் வங்கி, எம்&எம், மாருதி, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் 1.99% இழப்பைச் சந்தித்துள்ளன. மற்றொரு புறம் எச்.டி.எஃப்.சி வங்கி, யெஸ் வங்கி, பவர்கிரிட், டெக் மகிந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலிவெர், எஸ்பிஐ ஆகிய நிறுவனப் பங்குகள் 1.69% அளவிற்குச் சந்தையில் லாபத்தை ஈட்டியுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தக நாள் முடிவில் மும்பைப் பங்குச் சந்தை சென்செஸ் 135.09 புள்ளிகளை இழந்து 37847.65 ஆகவும், தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 59.70 இழந்து 11271.30 ஆக இருந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து 69.03ஆக இருந்தது.