இந்தியாவின் இறையாண்மைக்கும் இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி டிக்டாக் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் டிக்டாக் செயலியைச் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
இச்சூழலில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் தனது 8.4 லட்சம் ஊழியர்களுக்கு டிக்டாக் செயலியை நீக்கும்படி மின்னஞ்சல் அனுப்பியதாக செய்திகள் வெளியாகின. அந்த மின்னஞ்சலில், அமேசான் ஊழியர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் டிக்டாக் செயலியை நீக்கினால் மட்டுமே அலுவலக மின்னஞ்சலைப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த மின்னஞ்சலை தனது ஊழியர்களுக்குத் தவறுதலாக அனுப்பிவிட்டதாக அமேசான் நிறுவனம் தற்போது விளக்கமளித்துள்ளது. மேலும், தற்போது வரை டிக்டாக் செயலி தொடர்பான அமேசானின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிக்டாக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு முன்பு இதுதொடர்பாக அமேசான் எங்களிடம் எவ்வித ஆலோசனையிலும் ஈடுபடவில்லை. அமேசான் தவறுதலாக மின்னஞ்சலை அனுப்பியுள்ளதாகத் தற்போது விளக்கமளித்துள்ளது.
தகவல் பாதுகாப்பு தொடர்பாக எந்த நிறுவனமும் எங்களிடம் எப்போது வேண்டுமானாலும் ஆலோசனையில் ஈடுபடலாம். எங்களுக்குப் பயனாளர்களின் தரவுகளின் பாதுகாப்பே முக்கியமானது" என்றார்.
முன்னதாக, டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடைசெய்வது குறித்து பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பாம்பியோ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை!