இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்தித்துவருகிறது. இதனால் பெரும் நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிந்துவருகிறது. இந்தச் சரிவைக் கட்டுப்படுத்த நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
அதன்படி பிரபல சுங்க நிறுவனமான வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், பொதுமக்களிடம் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளை மீண்டும் நிறுவனமே வாங்கிக்கொள்ள இருப்பதாக அறிவித்தார்.
இதன் மூலம் வேதாந்தா நிறுவனம் முழு தனியார் நிறுவனமாகச் செயல்பட முடியும். மேலும் நிறுவனத்தின் நலனுக்கு தேவையான முடிவுகளை விரைவாக எடுக்கவும் இது உதவும் என்று துறை சார்ந்த வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையிலிருந்து வேதாந்தா நிறுவனம் வெளியேற எடுக்கப்பட்ட முடிவுக்கு அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு தற்போது அனுமதியளித்துள்ளது. இத்தகவலை வேதாந்தா நிறுவனம் உறுதி செய்துள்ளது.
தற்போது வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளில் 51.06 விழுக்காடு இயக்குநர் குழுவிடமும் பொதுமக்களிடம் 48.94 விழுக்காடும் உள்ளது. ஒரு பங்கிற்கு தலா 87.5 ரூபாய் என்ற விகிதத்தில் பொதுமக்களிடமிருந்து வேதாந்தா நிறுவனம் பங்குகளைத் திரும்ப வாங்கவுள்ளது.
இந்திய பங்குச் சந்தையில் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் தற்போது 91 ரூபாய்க்கு வர்த்தகமாகிவருகிறது.
இதையும் படிங்க: லாக்டவுன் 4.0: மகிழ்ச்சியில் அமேசான், பிளிப்கார்ட் !