கரோனா ஊரடங்கு காரணமாக ஆட்டோமொபைல் மட்டுமின்றி அனைத்து தொழில் துறைகளும் முற்றிலும் முடங்கின. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கார்கள் விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்திற்கான கார் விற்பனை தரவுகள் நேற்று வெளியானது. அதில் இந்திய ஆட்டோ மொபைல் துறையில் மிகப்பெரிய நிறுவனமான மாருதி சுசூகியின் விற்பனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 19 விழுக்காடு உயர்ந்து 1,72,862ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல ஹூண்டாய், டொயோட்டா, மஹிந்திரா&மஹிந்திரா, எம்.ஜி.மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து ஆட்டோமொபைல் டீலர் சங்க தலைவர் விங்கேஷ் குலாட்டி, "நவராத்திரி போன்ற பண்டிகை காலங்களால் வாகன விற்பனை சற்று அதிகரித்துள்ளது உண்மைதான். ஆனாலும், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் விற்பனை குறைவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
தற்போது ஆட்டோமொபைல் விற்பனை குறித்து வெளியான தரவுகள் ஹோல்செல் விற்பனை குறித்தவை. அதாவது தொழிற்சாலையில் இருந்து எவ்வளவு வாகனங்கள் டீலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்த தரவுகள். எனவே, இதை வைத்து மகிழ்ச்சியடைய தேவையில்லை.
ஆட்டோமொபைல் டீலர் சங்கம் சார்பாக சில்லறை விற்பனை குறித்த தரவுகள் விரைவில் வெளியாகும். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் சில்லரை வர்த்தகம் ஒற்றை இலக்கத்தில் சரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
இந்த சரிவுக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் இந்தியாவில் மாருதியை தவிர மற்ற நிறுவனங்களுக்கு விநியோக சங்கிலியில் சிக்கல் உள்ளது. இரண்டாவது காரணம், கடந்தாண்டு நவராத்திரியும், தீபாவளியும் ஒரே மாதத்தில் வந்தன. ஆனால், இந்த ஆண்டு வெவ்வேறு மாதங்களில் வருகின்றன. இது விற்பனையை பாதிக்கும் என்று நினைக்கிறோம்.
இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனையும் இரட்டை இலக்கத்தில் சரியும் என்று நினைக்கிறேன். அதிலும் ஹீரோவை தவிர மற்ற நிறுவனங்களுக்கு விநியோக சங்கிலியில் சிக்கல் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: டிவிஎஸ் வாகன விற்பனை 22% உயர்வு