சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா உள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவந்தது. இந்தச் சூழ்நிலையில் அமல்படுத்தப்பட்ட கரோனா ஊரடங்கு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை முற்றிலுமாக மாற்றியது.
கரோனா ஊரடங்கு அமல்படுத்திய ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை பெரியளவில் குறைந்தது. பண்டிகை கால விற்பனை அதிகரித்துள்ளதால், கடந்தாண்டு நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஸ்மார்ட்போன் விற்பனை 2.4 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் ஸ்மார்ட்போன் விற்பனை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இருப்பினும், விநியோகச் சங்கிலியில் இருந்த பிரச்சினை தொடர்ந்ததால் விரும்பிய ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களால் பெற முடியவில்லை.
தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கித்துவம் அளிக்கின்றன. இதன் காரணமாக ஸ்மார்ட்போன்களில் விலையும் அதிகரிக்கிறது. இந்தியாவில் இப்போது வரை 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதால் மக்கள் 5ஜி தொழில்நுட்பத்திற்குப் பெரியளவு முக்கியத்துவம் அளிப்பதில்லை.
இதையும் படிங்க: மீண்டும் களைகட்டிய மாருதி சுஸூகி விற்பனை!